இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம் (F.C. Internazionale Milano) (ஒலிப்பு ) , பொதுவாக இன்டர்நேசியோனல் அல்லது இன்டர் என்றழைக்கப்படுவது, இத்தாலியைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்துக் கழகம் ஆகும். இத்தாலியைத் தவிர்த்து பிற நாடுகளில் இன்டர் மிலான் என்று வழமையாக அறியப்படுகிறது. இது இத்தாலியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான சீரீ ஆவில் பங்கேற்று ஆடிவருகிறது; 1909-ஆம் ஆண்டிலிருந்து இத்தாலியின் முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடரிலேயே ஆடிவருகிறது.
இன்டர் மிலான் உள்நாட்டுப் போட்டித் தொடர்களில் 30 கோப்பைகளை வென்றுள்ளது. அவற்றுள் 18 முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிக் கோப்பைகளும், 7 இத்தாலியக் கோப்பைகளும், 5 இத்தாலிய உன்னதக் கோப்பைகளும் அடங்கும். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து சீரீ ஆ கோப்பைகளை வென்றனர்; இதுவே அதிகபட்ச தொடர்வெற்றியாகும். மேலும், மூன்று வாகையர் கூட்டிணைவுக் கோப்பைகளையும் வென்றுள்ளது (1964, 1965 மற்றும் 2010).
80,000 பார்வையாளர்களுக்கும் மேல் கண்டு இரசிக்கக்கூடிய சான் சிரோ ஆட்டக்களத்தில் இக்கழகம் தனது அமைவிடப்போட்டிகளை ஆடிவருகிறது.